டென்னிஸில் அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற உலகின் நான்காம்நிலை வீரரான ரொஜர் பெடரரின் சாதனையை உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் சமப்படுத்தியுள்ளார். பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வந்த பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலைவீரரான நொவக் ஜோக்கோவிச்சை, 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானதன் மூலமே சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரின் சாதனையை ஸ்பெய்னின் ரஃபேல் நடால் சமப்படுத்தியுள்ளார். அந்தவகையில், ரொஜர் பெடரர், ரஃபேல் நடால் ஆகியோர் தலா 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் அடுத்த இடத்தில் 17 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களுடன் சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் காணப்படுகிறார். இந்நிலையில், குறித்த வெற்றியானது பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் தனிநபர் போட்டிகளில் ரஃபேல் பெற்ற 100ஆவது வெற்றி ஆகும். இம்முறையுடன் 13 தனிநபர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரில் கைப்பற்றியுள்ள ரஃபேல் நடால், இரண்டு போட்டிகளில் மாத்திரமே இதுவரையில் தனிநபர் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது